Skip to main content

வீடு புகுந்து அரிவாள் வெட்டு; 8 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

Published on 16/01/2025 | Edited on 16/01/2025
Scythe cut the house; A gang of 8 is rampant

திருவள்ளூரை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி உலகநாதன் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை காசிமேடு திடீர் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் உலகநாதன். சரித்திரப் பதிவேடு குற்றவாளியான உலகநாதன் கடந்த பொங்கல் தினத்தன்று வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். உலகநாதனின் பாட்டி வளர்மதி வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். இரவு சுமார் 9.30 மணியளவில் மர்ம நபர்கள் எட்டு பேர் புகுந்து உலகநாதனை சரமாரியாக வெட்டினர். அதேபோல் உலகநாதனின் மனைவி மாலதியையும் வெட்டினர்.

இருவரும் சரமாரியாக வெட்டப்பட்டதை அறிந்து உலகநாதனின் பாட்டி கத்தி கூச்சலிட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடினர். போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த உலக நாதனையும் மாலதியையும் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் உலகநாதன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார்.

மாலதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து உலகநாதனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. கொலை சம்பவத்தின் போது அங்கிருந்த உலகநாதனின் பாட்டியிடம் போலீசார் விசாரித்த பொழுது அதே பகுதியில் பிரபல ரவுடியாக இருந்த தேசிங்கு என்பவரின் மகனும் அவரது கூட்டாளிகளும் தான் கொலையில் ஈடுபட்டனர் என தெரிவித்தார்.

தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு வல்லரசு (ரவுடி தேசிங்குவின் மகன்), அந்தோணி, எபினேசர், மனோஜ், எழிலரசன், குணசேகரன் ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரவுடியான தேசிங்குவும் உலகநாதனும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். இவர்களுக்கிடையே முன் பகை இருந்து வந்தது. கடந்தாண்டு வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்த தேசிங்கை பத்து பேர் கொண்ட மர்ம கும்பல் கொலை செய்தது. அதற்கு உலகநாதன் உதவி செய்ததாக கூறப்பட்டது. இதனால் உலகநாதனை பழிவாங்க தேசிங்குவின் மகன் வல்லரசு கூட்டாளிகளுடன் சேர்ந்து உலகநாதனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்