வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்துள்ளது. இப்புயல் சென்னையிலிருந்து 480 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. தொடர்ச்சியாக 12 கிலோமீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது.
சென்னை, புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. எனவே, பொதுமக்கள் கடற்கரைகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தின் அருகே நாளை இரவில் கரையைக் கடக்கும் என நேற்று முதல் சொல்லப்பட்டது. கரையைக் கடக்கும்பொழுது மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோரப்பகுதிகளில் இருக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கும் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். துறைமுகத்தில் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி மீனவர்கள் தங்களது படகுகளை தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.