
சிதம்பரம் அருகே கிள்ளை, தில்லைவிடங்கன், கீழ சாவடி, குச்சிபாளையம், எடப்பாளையம், கிள்ளை தைகால், வாக்குசாவடி, பின்னத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 1,450 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெரும் வகையில் சொக்கன்ஓடை விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக உள்ளது.
சொக்கன் ஓடை வாய்க்காலின் கடைமடையில் தண்ணீரை தேக்கி பாசனத்திற்கு பயன்படுத்துவதற்கும், மழை மற்றும் வெள்ள காலங்களில் வெள்ளை நீரை வெளியேற்றியும் உப்பனாற்றில் இருந்து கடல் நீர் வாய்க்காலில் உட்புகாமல் இருக்க கதவணையுடன் கூடிய தடுப்பணை கடந்த 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருந்தது. தற்போது பயனற்று இடிந்து விழும் தருவாயில் உள்ளதால் உப்பு நீர் உட்புகுந்து விளைநிலங்கள் பாதிப்படைகின்றன. எனவே சொக்கன் ஓடை கடைமடை பகுதியில் ஒழுங்கியம்( கதவணையுடன் கூடிய தடுப்பணை) அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்ததன் பேரில் ரூ 9 கோடி மதிப்பீட்டில் குச்சிபாளையம் அருகே சொக்கன்ஓடையில் ஒழுங்கியம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி ஒழுங்கியம் அமைக்கும் கட்டுமான பணியைத் தொடங்கி வைத்தார். இவருடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபிஆதித்யாசெந்தில்குமார், சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன்குமார், நீர்வளத்துறைச் செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி பொறியாளர் ரமேஷ் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.