
அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் நெல்லையில் அஜித் ரசிகர்கள் கூடியிருந்த திரையரங்கின் முன்பு நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை காண்பித்து அலப்பறை செய்தவரை அஜித் ரசிகர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று இரவு 'நெல்லை ராம் சினிமாஸ்' திரையரங்கில் விடாமுயற்சி திரைப்படத்தின் காட்சிக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை காட்டியவாறு இளைஞர் ஒருவர் கூட்டத்தில் ஆட்டம் ஆடி அலப்பறை செய்துள்ளார். உடனடியாக அங்கிருந்த அஜித் ரசிகர்கள் ஒரு சிலர் பொறுக்காமல் அவரை அடித்ததோடு, கொடியைப் பிடுங்கி வெளியே அனுப்பினர். இந்நிலையில் அந்த தாக்குதல் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் 'கடவுளே அஜித்தே' என்றும் 'தவெக ஒழிக' என்றும் அஜித் ரசிகர்கள் முழக்கமிட்டபடி அந்த நபரை வெளியேற்றினர். சமூக வலைத்தள மோதலை தாண்டி திரையரங்கின் வாயிலில் அஜித் விஜய் ரசிகர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்மையில் 'அஜித் வாழ்க; விஜய் வாழ்க என சொல்லும் நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள்?' என்றும் 'பொது இடங்களில் கடவுளே அஜித்தே என முழக்கமிடுவதை கண்டித்தும் நடிகர் அஜித் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.