தென்மாவட்டத்தில் துறைமுகம், ஷிப்பிங் கார்ப்பரேசன் மற்றும் பல தொழில்களைக் கொண்ட பணப்புழக்கமுள்ள நகரம் தூத்துக்குடி. செல்வச் செழிப்பைக் கொண்ட ஏரியா என்பதால் வியாபாரத்தில் ஏற்றமிருக்கும். அதே சமயம், சில திரைமறைவுக் கும்பல்களால் மோசடிகள் நடப்பதும் அவ்வப்போது அவர்கள் பிடிபடுவதும் நடந்துவருகிறது.
குறிப்பாக, கள்ளடாலர் மற்றும் பழைய நோட்டுகளை கமிஷன் அடிப்படையில் மாற்றம் செய்தல் போன்றவைகள் கடந்த காலங்களில் பிடிபட்டும் இருக்கின்றன.
இதனிடையே நகரில் இரண்டு பேர் போலியான வைரங்களுடன் சுற்றி வருவதாகக் கிடைத்த தகவலையடுத்து மாவட்ட எஸ்.பியான ஜெயக்குமாரின் உத்தரவின்பேரில் வடபாகம் போலீசார் நேற்று முன்தினம் மாலை சோதனை செய்தனர். அப்போது, கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு பேரை மடக்கி சோதனையிட்டதில் அவர்களிடமிருந்து கருப்பு நிறத்தில் இரண்டு வைரக் கற்களைக் கைப்பற்றினர்.
அவர்களைப் போலீசார் விசாரித்தபோது, கர்நாடகாவின் பெங்களூர் பகுதியின் ஜே.பி.நகர் கொத்தனூர் தின்னே ஏரியாவைச் சோந்த அனந்தா (37) மற்றும் ஒசூரின் இந்திரா நகரைச் சோந்த வெங்கடேஷ்பாபு (45) என்பதும் தெரியவந்திருக்கிறது.
அனந்தாவின் ஒசூர் மாமனார் அங்கு ஜோதிடராக இருப்பவர். அவர் கொடுத்த அதிர்ஷ்ட ராசிக்கல்லான கறுப்பு வைரக் கற்களை விற்பதற்கு வந்ததாகத் தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த வைரக் கற்களை எடை போட்டதில் 427 கேரட் எடை என்பதை அறிந்து கொண்ட போலீசார் அவைகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
இதனிடையே தூத்துக்குடியில் தங்கிய இவர்கள், தங்களிடம் உள்ளது ராசியான வைரக் கற்கள். தேவை எனில் 27 லட்சம், இதுவே குறைந்த விலை என்று புரோக்கர்கள் மூலம் பேரம் பேசியதாகத் தெரிகிறது. மேலும் இந்த வகை கருப்பு ராசிக்கற்களை குறிப்பிட்ட ஒரு மதத்தினரே வாங்குவர் என்பதால் அவர்களிடம் பேரம்சியது தெரியவந்திருக்கிறது.
இதனிடையே வைரக் கற்களை ஆய்வுசெய்த மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமார், “ஆய்வு செய்ததில் அது உண்மையானதல்ல எனத் தெரியவந்திருக்கிறது. அவர்கள் அதைக் கொண்டு வேறு எங்காவது மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்று விசாரிக்கப்படுகிறது. கருப்பு வைரத்தை யாரும் வாங்க மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் வாங்குவர் என்று அறிந்து தூத்துக்குடி வந்துள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.