தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று சட்டசபையில் சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. கூறினார். ஆசிரியர்கள் நியமனம் குறித்து, தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;
“அரசுப் பள்ளிக்கூடங்களில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ. 5 ஆயிரம் வைப்புத் தொகை வைக்க வேண்டும். அந்த மாணவர்களின் மேல்படிப்பு தடையின்றி தொடருவதற்கு இந்த உதவித்தொகை உதவியாக இருக்கும். மொடக்குறிச்சி தொகுதியில் அனைத்து சிறப்பம்சம் கொண்ட விளையாட்டு திடல், நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச தரத்திலான உள் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை 30:1 என்ற விகிதத்தில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்படும் நிலையில், தமிழ்நாட்டிலும் அமல்படுத்த வேண்டும். இல்லையென்றால் நவீன இந்தியாவின் கல்விப் போக்கில் தமிழ்நாடு பின்தங்கி விடும்.
நவோதயா பள்ளிக்கூடங்கள் மூலமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் சிறந்த கல்வியைப் பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் நவோதயா பள்ளிக்கூடங்களைத் தொடங்க வேண்டும். அரசுப் பள்ளிக்கூடங்களில் தற்காலிக ஆசிரியர்களாகப் பணியாற்றி வருபவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். 2010-ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துள்ள 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், 300 தமிழ் ஆசிரியர்களுக்கு வேலை வழங்க அரசு முன்வர வேண்டும். அரசுப் பள்ளிக்கூடங்களில் மரத்தடியில் கல்வி கற்றுக்கொடுப்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. உதாரணமாக மொடக்குறிச்சி தொகுதியிலேயே கற்றுக் கொடுக்கப்படுகிறது. அனைவருக்கும் தரமான கல்வி, சிறந்த மருத்துவம், மது இல்லாத தமிழகமாக இருந்தால் நாட்டின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழும்” என்றார்.