சேலத்தில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நான்கு பேரிடம் 40 லட்சம் ரூபாய் வசூலித்துக்கொண்டு மோசடி செய்ததாக பாஜக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலத்தை அடுத்த மாரமங்கத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் கவுதம் (31). இவர், பாஜகவில் நெசவாளர் அணி மாநில செயலாளராக உள்ளார். இவர், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது சென்னை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி, சேலத்தில் நான்கு பேரிடம் பணம் வசூலித்துள்ளார். சில மாதங்கள் கழித்து பணம் கொடுத்த நபர்களிடம் சுகாதார ஆய்வாளர் பணி நியமன ஆணைகளையும் வழங்கியுள்ளார். அந்த பணி நியமன ஆணைகளுடன் பணியில் சேர சென்றபோதுதான் அவை போலியான ஆணைகள் என்பதும், கவுதம் பணம் வசூலித்துக்கொண்டு ஏமாற்றி இருப்பதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சுதா, விஜயகுமார் உள்ளிட்ட நான்கு பேர் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் கவுதம் மீது புகார் அளித்தனர். அதில், சென்னை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தலா 10 லட்சம் வீதம் 40 லட்சம் ரூபாய் ராஜேந்திரன் வசூலித்துக்கொண்டு ஏமாற்றி விட்டதாக புகாரில் தெரிவித்து இருந்தனர். மேலும், சூரமங்கலத்தில் நீட் பயிற்சி மையம் நடத்தி வரும் சின்னான், சென்னையைச் சேர்ந்த மகேஸ்வரி ஆகியோரும் கவுதமுக்கு உடந்தையாக இருந்ததாகவும் புகாரில் கூறியிருந்தனர்.
அதன்பேரில் கடந்த ஏப்ரல் மாதம் கவுதம், மகேஸ்வரி, சின்னான் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் மூன்று பேரும் திடீரென்று தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில் ஜூன் 30ம் தேதி கவுதமை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.