
இன்று (18.11.2021) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் அதி கனமழை பொழியும் என்பதால் நான்கு மாவட்டங்களுக்கும் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்குக் கனமழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் மேற்கு நோக்கி நகர்ந்துவரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வரும் 18ஆம் தேதி (இன்று) தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழ்நாடு இடையே கடந்து செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அடுத்த 12 மணி நேரத்தில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் 20 சென்டிமீட்டர் மழை, தாராபுரத்தில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டையில் 10 சென்டி மீட்டர், உதகையில் 9.8 சென்டி மீட்டர், கறம்பக்குடி, நீடாமங்கலம், வலங்கைமானில் தலா 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.