குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தோல் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற தலைப்பில் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் இன்று (25/08/2022) காலை 11.00 மணிக்கு மண்டல மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அதிகம் உள்ள மாவட்டம் திருப்பூர். 57,900 சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நிறுவனங்கள் திருப்பூரில் உள்ளன. அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் பங்கு அதிகம். தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமின்றி தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது. மூன்று லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
நேற்றைய தொழிலாளி, இன்றைய முதலாளி, இன்றைய தொழிலாளி, நாளைய முதலாளி என்பது திருப்பூருக்கு பொருந்தும். திருப்பூரைத் தனி மாவட்டமாக அறிவித்தவர் கலைஞர். பெருந்தொழில்களை மட்டுமே நம்பி இருக்காமல் சிறு, குறு, நடுத்தர தொழில் ஊக்கமடைய வேண்டும் என அரசு விரும்புகிறது. தொழில்கள் சென்னையை அல்லது குறிப்பிட்ட மாநகரத்தை மட்டுமே மையப்படுத்தி அமைந்து விடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.