பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் மீது, மற்றொரு போட்டியாளர் சனம் பிரசாத் அளித்த புகாரில் பதிவான வழக்கின் நிலைகுறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய, சென்னை காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிக்பாஸ் 3- வது சீசனில் பங்கேற்று பிரபலமடைந்த தர்ஷன், தன்னைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியதை நம்பி, அவருடன் நெருக்கமாகப் பழகியதாகவும், அவருடைய முன்னேற்றத்திற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்த நிலையில், பிரபலம் அடைந்தவுடன், திருமணம் செய்ய மறுப்பதோடு, சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்து, தன்னையும் தன் குடும்பத்தையும் இழிவுபடுத்தியதாகவும், 4- வது சீசனின் போட்டியாளர் சனம் பிரசாத் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக, அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் வழக்கு பதிவுசெய்த நிலையில், அந்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், சனம் பிரசாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், ‘புகாரைப் பெற்று வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், இன்னும் விசாரணை அளவிலேயே உள்ளது. எனக்கு கொலை மிரட்டல் விடுப்பது மற்றும் சமூக வலைத்தளங்களில் இழிவுபடுத்துவது தொடர்பாக, உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியுள்ளார்.
இந்த மனு, நீதிபதி ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், சனம் பிரசாத்தின் வழக்கு குறித்து, மூன்று வாரத்திற்குள் பதில் அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, அடையார் மகளிர் காவல் நிலையத்தில் தர்சன் மீது பதிவான வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.