பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றாதது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் ஜனவரி 31- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருப்புகள் மற்றும் கடைகள் அகற்றப்படுவதை எதிர்த்தும், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் திரும்பப் பெறக்கோரியும் பெத்தேல் நகர் மக்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 4,000 குடியிருப்புகளில் 30,000- க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் இரண்டு பேர் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு இன்று (28/01/2022) விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வீடுகளுக்கான மின் இணைப்பைத் துண்டிக்கும் உத்தரவை நீட்டிக்கக் கோரினார். அத்துடன், 1,052 வணிக கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது; 1,007 நிறுவனங்களின் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, 65 சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளன என்று விளக்கம் அளித்தார்.
இதனையேற்ற நீதிபதி, இந்த வழக்கை வரும் ஜனவரி 31- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.