நெல்லை அரசு இன்ஜினியரிங் கல்லூரி எதிரில் உள்ள ரோஸ் நகரில் வசித்த நெல்லை மாநகராட்சியின் முதல் மற்றும் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி (60), அவரது கணவர் முருகசங்கரன் (70), வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்த மேலப்பாளயம், ஆசிரியர் காலனியைச் சேர்ந்த மாரியம்மாள் (40) கடந்த ஜூலை 23ம் தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததோடு, பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து சீனியம்மாளின் மகன் கார்த்திக் ராஜை (35) கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு நெல்லை சிபிசிஐடி. போலீசிற்கு மாற்றம் செய்யப்பட்டது. சிபிசிஐடி போலீசார் கார்த்திக்ராஜை காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் அவரது தந்தை தன்னாசி (71) சீனியம்மாள் (60) ஆகியோர் கார்த்திக்ராஜை கொலை செய்ய தூண்டியதும் தெரிய வந்தது. சிபிசிஐடி., போலீசார் நேற்று முன்தினம் தன்னாசி, சீனியம்மாளை மதுரையில் கைது செய்து நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
இந்திலையில் கார்த்திக்ராஜ் ஜாமின் கோரி நெல்லை ஜே.எம்.1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் பாபு, கார்த்திக்ராஜிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் சிபிசிஐடியினர் 90 நாட்களாகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததே இதற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.