பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறை உருவாக்குதல், 31 சதவீத அகவிலைப்படி வழங்குதல், புதிய விற்பனை முனையம், மோடம் வழங்குதல், புதிய ஊதிய உயர்வை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக வழங்குதல், ஓய்வூதியம், சரியான எடையில் தரமான பொருட்கள் பொட்டலமாக வழங்குதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றிலிருந்து (07.06.2022) தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் மாநிலம் முழுவதும் 3 நாள் தொடர் வேலை நிறுத்தத்திலும், போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், நேற்று (7.6. 2022) கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் கே.ஆர்.தங்கராசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்டட உரையாற்றினார். மாநில பொருளாளர் கு.சரவணன், தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் கோ.ஜெயச்சந்திரராஜா, மாவட்ட செயலாளர் பி.ஜி.செல்வராஜ், மாவட்ட பொருளாளர் கே.ஜி.அருள் உள்ளிட்ட பலரும் கண்டன உரையாற்றினர்.
தொடர் வேலை நிறுத்த போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று (8.6.2022) மாநிலம் முழுவதும் கோட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நியாய கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நியாய விலைக் கடை பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
நாளை (9.6.2022) வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மேலும் மூன்று நாட்கள் நடைபெறும் இப்போராட்டத்திற்கு பின்பு, வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழக முதலமைச்சரை சந்திக்க காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.