Skip to main content

கஜா புயலில் உயிர் இழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்! எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
gaja storm



கஜா புயலில் உயிர் இழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், இயல்பு வாழ்க்கை திரும்ப தேவையான நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே. ஃபைஜி வலியுறுத்தியுள்ளார்.
 

இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கஜா புயலில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதாது. தமிழக அரசு அறிவித்துள்ள ரூ. 10 லட்சம் நிவாரணத்துக்குப் பதிலாக, தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல் பெரிய அளவில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணத்துக்குப் பதிலாக ரூ. 5 லட்சமும், சிறிய அளவிலான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரத்துக்குப் பதிலாக ரூ. ஒரு லட்சமும் நிவாரணம் வழங்க வேண்டும். 
 

கஜா புயலால் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, அடிப்படை வசதிகள் மக்களுக்கு மீண்டும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதோடு, மத்திய அரசு இந்த இக்கட்டான தருணத்தில் தமிழக அரசுக்கு தேவையான நிதியை உடனடியாக வழங்க வேண்டும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது மோடி தலைமையிலான மத்திய அரசு கடைப்பிடித்த இரட்டை நிலைப்பாட்டை கைவிட்டுவிட்டு, தமிழகத்துக்கு தக்க உதவியை செய்ய வேண்டும்.
 

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எஸ்.டி.பி..ஐ. கட்சியின் செயல்வீரர்கள், நிவாரணக் குழுக்களை அமைத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மனிதாபிமானத்தோடு நிவாரண உதவிகளை செய்து வருகின்றார்கள். அதற்கு, என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 

இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கொடுத்த உறுதிமொழியை நினைவுப்படுத்துகிறேன். அதற்கான பணிகள் இன்றுவரை தொடங்கப்படவில்லை. மத்திய அரசு தனது உறுதிமொழியை செயல்படுத்தும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.
 

தொடர்ந்து பேசிய அவர், “அம்பேத்கராலும் மற்ற சட்ட வல்லுநர்களாலும் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் வகையில், எஸ்.டி.பி.ஐ. கட்சி விரைவில் நாடு தழுவிய அளவில் ஒரு இயக்கத்தைத் தொடங்கும். ஏனென்றால், இந்துத்துவா அமைப்புகள் அதற்கு எதிராக அச்சுறுத்தல் ஏற்படுத்தி, மனுஸ்மிருதியை நிலைநாட்ட முயல்கிறார்கள். மனுஸ்மிருதி தான் நமது அரசியல் சட்டம் என்றால், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த டீ விற்பனை செய்தவரான நரேந்திர மோடி, இந்த நாட்டில் பிரதமராக வந்திருக்க முடியாது என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். இந்தியாவுக்கு அடிப்படையாக இருக்கும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்காக இந்தியாவில் உள்ள சிறிய பெரிய அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து ஒருவரோடு ஒருவர் கரம் கோர்க்க வேண்டும்.” என்றும் கேட்டுக் கொண்டார்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி உறுதி? - வெளியான புதிய தகவல்! 

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
ADMK DMDK Alliance Confirmed New information released

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது. அதே சமயம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தே.மு.தி.க. சார்பாகத் தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் அ.தி.மு..க துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகம் மற்றும் புதுவை 40 மக்களவைத் தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வரும் 24 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைக்கிறார்” எனத் தெரிவித்தார்.

ADMK DMDK Alliance Confirmed New information released

இந்நிலையில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே கூட்டணி நாளை (20.03.2024) உறுதியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை முடிவில் தே.மு.தி.க.வுக்கு 4 அல்லது 5 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. (SDPI) ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நாளை காலை 10 மணிக்கு, தொகுதி உடன்பாடு கையெழுத்தாக உள்ளது. அப்போது புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மத்திய சென்னை தொகுதியும் ஒதுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகச் சென்னையில் எடப்பாடி பழனிசாமி உடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சந்தித்து கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மாநிலக் குழுவுக்கு அதிகாரம்; எஸ்.டி.பி.ஐ கட்சி மாநிலச் செயற்குழுவில் தீர்மானம்

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
SDPI State Executive Committee to empower state committee to form alliance in parliamentary elections

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயற்குழு மற்றும் மாவட்டத் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் நேற்று(12.2.2024) நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது,  பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸுருதீன், மாநிலச் செயலாளர்கள் அபுபக்கர் சித்திக், ரத்தினம், ஏ.கே.கரீம், ராஜா ஹூசேன், நஜ்மா பேகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.  இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டத் தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேர்தல் குழுவின் மூலம் நடைபெற்ற பணிகள் குறித்த ஆலோசனையும் நடைபெற்றது. மேலும், கூட்டணியோடு தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை மாநிலத் தலைமை நிர்வாகக் குழுவுக்கு வழங்கி மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கடந்த பத்தாண்டு பாஜக ஆட்சியின் அவலத்தை, மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையிலும், அதன் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும், கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் மாநில சுயாட்சிக்கு எதிரான போக்கையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது, சிறுபான்மை மக்கள், அரசு ஊழியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும் மக்கள் மத்தியில் கொண்டுசெல்வது, தமிழக மீனவர்களை பாதுகாக்கத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும், தமிழக மீனவர்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.