![ariyalur school student incident case high court madurai bench](http://image.nakkheeran.in/cdn/farfuture/kZhO3XJjS7b2OLctMSZhoKk6FMY3fJV5lo4L3goRV9Q/1643431719/sites/default/files/inline-images/madurai3_4.jpg)
அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற உத்தரவிடக்கோரி பெற்றோர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
அரியலூர் பள்ளி மாணவி மதமாற்ற வற்புறுத்தலால் தற்கொலை செய்துக் கொண்டதாகவும், விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற உத்தரவிடக் கோரியும் மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்த போது, "மாணவி பேசிய வீடியோவின் உண்மைத் தன்மையை உறுதி செய்வதே தற்போது முக்கியம். எத்தனை வீடியோ எடுக்கப்பட்டது, யார் யாருக்கெல்லாம் பகிரப்பட்டது என விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் வீடியோ பதிவு செய்த முத்துவேல் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. உண்மையின் நீதியை விரும்பியிருந்தால் வீடியோவை எடுத்த நாளிலேயே வெளியிட்டிருக்கலாம்" என அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "செல்போனை ஒப்படைத்தப் பின் வெளியான புதிய வீடியோ விசாரணையைத் திசைத் திருப்பியுள்ளது. மாணவியை மதமாற்றக் கட்டாயப்படுத்தப்படவில்லை என தஞ்சை மாவட்ட காவல்துறை ஆணையர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் கூறியதால், காவல்துறை விசாரணை மீதான நம்பிக்கை குறைந்துள்ளது" என்று வாதிட்டார்.
இதனிடையே, மாணவி மற்றும் அவரது குடும்பத்தினரின் தனியுரிமையைக் கருத்தில் கொண்டு அறிக்கையாக சில விவரங்களை தாக்கல் செய்திருப்பதாக இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக தூய இருதய அன்னை சபை தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், மாணவியை, அவரது சித்தி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியுள்ளார். ஆனால், அரசியல் காரணத்திற்காகவே எங்கள் மீது அவதூறு பரப்பப்படுகிறது என்று குறிப்பிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.