![Apply for a free education! Report Compulsory Tuition fee! Cuddalore district administration announces!](http://image.nakkheeran.in/cdn/farfuture/2nR2Qh9C8iUaCAmdEnOVdC261lhabMp_Dk931cbs0-0/1599199478/sites/default/files/inline-images/Cuddalore_ot_0.jpg)
இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடலூர் மாவட்டத்தில் தொடங்கியிருப்பதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மையல்லாத தனியார், சுயநிதி (நர்சரி, பிரைமரி, மெட்ரிக்) பள்ளிகளில் நலிவடைந்த மற்றும் வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி பிரிவில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை கடந்த 2013 -14 ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2018 -19 ஆம் கல்வி ஆண்டு முதல் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம் இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது 2020 - 21 ஆம் கல்வியாண்டில் குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளிக்கல்வித்துறையின் rte.tnschool.gov.in என்ற இணையதளத்தில் வரும் 25-ஆம் தேதி வரை இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். மனுதாரரின் இருப்பிடத்திலிருந்து பள்ளி அமைவிடம் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள் இருக்க வேண்டும், அதற்கான இருப்பிட சான்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேலும் ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்திற்கு கீழ் உள்ள அனைத்து பிரிவினரும் நலிவடைந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம். அதற்கு பெற்றோரின் ஆண்டு வருமான சான்று சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடம் பெற்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
மேலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள், சீர்மரபினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் விண்ணப்பிக்க உரிய அலுவலரிடம் சாதிச்சான்று பெற்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு பிரிவினரான ஆதரவற்றோர் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள் போன்றோருக்கு உரிய அலுவலரால் வழங்கப்பட்ட சான்றை பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.
வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினருக்கு பெற்றோரிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மீதான குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், "தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் தெரிவித்தபடி 100 சதவீத பள்ளி கட்டணம் செலுத்த கோரி கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது பெறப்படும் புகார்களை பதிவு செய்யவும், உடனடியாக உரிய விசாரணை மேற்கொள்ளவும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு cuddaloreceo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டணம் தொடர்பாக ஏதேனும் குறைபாடுகள், புகார்கள் இருப்பின் அதனை இந்த மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள், பெற்றோர்கள் தெரிவிக்கலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.