சேலத்தில், ஆட்டோ ஓட்டுநர் கல்லால் தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் பள்ளப்பட்டியில் உடையார்காடு பகுதியில் காலியாக இருந்த வீட்டு மனையில் திங்கள்கிழமை காலையில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் பள்ளப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து விசாரிக்க, உதவி ஆணையர் செல்வராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையில், கொல்லப்பட்ட நபர், சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி சாலையைச் சேர்ந்த முருகன் மகன் ரமேஷ் (26) என்பது தெரிய வந்தது. இவரும் தாதகாப்பட்டி சண்முகம் நகரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் வெங்கடேசன் (31) என்பவரும் நண்பர்கள். இருவரும் ஆட்டோ ஓட்டுநர்கள். வெங்கடேசனுக்கு அவருடைய மனைவியின் அக்காள் மகளுடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். அதே பெண்ணுடன் ரமேஷூம் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.
'எனக்கும், என் மனைவியின் அக்காள் மகளுக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தும் நீ எப்படி அவளுடன் பழகலாம்? தொடர்ந்து அவளோடு பழகுவது உனக்கு நல்லதல்ல,' என்று சில நாள்களுக்கு முன்பு வெங்கடேசன், ரமேஷை கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனாலும் ரமேஷ் அந்தப்பெண்ணுடன் பழகுவதை நிறுத்தவில்லை. இதனால் பொறுமை இழந்த வெங்கடேசன், அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார்.
இந்த நிலையில்தான் ஞாயிற்றுக்கிழமை (நவ. 3) சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு ரமேஷ் தனது நண்பர்களுடன் மது அருந்தச் சென்றிருந்தார். அங்கு ஏற்கனவே மது அருந்த வந்திருந்த வெங்கடேசன், ரமேஷைப் பார்த்தவுடன் அவருடன் தகராறில் ஈடுபட்டார்.
மேலும் அவர், தனது சகோதரர்களான அன்னதானப்பட்டி சிவசக்தி நகரில் உள்ள மணிவண்ணன் (36), பள்ளப்பட்டியில் வசிக்கும் குணா என்கிற குணசேகரன், முருகேசன் (25), திருவாக்கவுண்டனூர் அம்மாசி நகரைச் சேர்ந்த தனது சித்தி மகன் கார்த்திக் (30) மற்றும் தனது நண்பரான வேலு நகரைச் சேர்ந்த மூர்த்தி ஆகியோருக்கும் தகவல் அளித்து, அவர்களை சீலநாயக்கன்பட்டி டாஸ்மாக் கடை அருகே வரவழைத்தார்.
அந்த கும்பல், ரமேஷை சமாதானம் பேச வருமாறு பள்ளப்பட்டியில் கூட்டுறவு வேளாண் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு பின்புறம் உள்ள உடையார் காடு பகுதிக்கு வருமாறு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர். கொலையுண்ட ரமேஷூம் ஏற்கனவே பலமுறை அவர்களுடன் சேர்ந்து சம்பவ இடத்தில் மது அருந்தியுள்ளார். அதனால் நம்பிக்கையுடன் அவர்களுடன் சென்றார்.
சம்பவ இடத்திற்கு அழைத்துச்சென்ற அவர்கள், மேற்படி பெண்ணுடன் பழகுவதை உடனடியாக நிறுத்திவிட்டு, வீட்டை காலி செய்துவிட்டு வேறு பகுதிக்கு சென்று விட வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இதனால் அந்த கும்பலுக்கும் ரமேஷூக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
எப்படியும் ரமேஷை தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர்கள், கீழே கிடந்த காலி மதுபான பாட்டிலால் அவருடைய வயிற்றில் குத்தியுள்ளனர். முகத்தில் கல்லால் தாக்கியும் கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக வெங்கடேசன், அவருடைய அண்ணன் மணிவண்ணன், தம்பி முருகேசன் (25), சித்தி மகன் கார்த்தி (30) ஆகிய நான்கு பேரையும், ரெட்டியூர் ஏரிக்கரையில் வைத்து காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (நவ. 5) கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
கைதான அவர்கள் நால்வரையும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரே நாளில் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.