வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அ.தி.மு.க.வின் சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கித் தலைவருமான இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன் குமார் மீது சேலத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதல் தகவல் அறிக்கையில், இளங்கோவன் கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் 2020- ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக 131% சொத்து சேர்த்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இளங்கோவன் வருமானத்தை விட ரூபாய் 3.78 கோடிக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார்.
இந்த நிலையில், இளங்கோவனுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிகாலை முதலே அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றன. சேலம் மாவட்டத்தில் 23 இடங்களிலும், திருச்சி மாவட்டத்தில் 6 இடங்களிலும், சென்னை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா 3 இடங்களிலும், கோவை மாவட்டத்தில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன் வீட்டில் நடந்த சோதனையில் ரூபாய் 29 லட்சம் கண்டறியப்பட்டுள்ளது. 21.2 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளிப் பொருட்களும் அவரது வீட்டில் கண்டறியப்பட்டுள்ளது. 10 சொகுசு கார், 2 வால்வோ சொகுசு பேருந்து, 3 கணினி ஹார்டு டிஸ்க், சொத்து ஆவணங்களும், கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், வங்கிக் கணக்கு புத்தகங்கள், வைப்புத்தொகை ரூபாய் 68 லட்சம் ஆகியவைக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வழக்கிற்குத் தொடர்புடைய பணம், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.