கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் விடுதிகள் உள்ளது. இதில் தாமரை விடுதியில் 500-க்கும் மேற்பட்ட முதுநிலை பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவிகள் தங்கியுள்ளனர்.
பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதிக் கட்டணத்தை ஒவ்வொரு மாணவருக்கும் 5 ஆயிரம் முதல் திடீரென உயர்த்தியுள்ளது. இதனால் விடுதியில் தங்கி படிக்கும் ஏழை எளிய மாணவிகளுக்கு அரசிடமிருந்து ஸ்காலர்ஷிப் குறைவாக வந்துள்ளது. ஆகையால் மாணவிகள் ஒவ்வொருவரும் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை விடுதிக் கட்டணத்தை உடனே கட்ட வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.
மாணவிகள் தேர்வில் கலந்துகொள்ள விடுதியில் இருந்து கட்டணம் பாக்கி இல்லை என்ற சான்று கொடுத்தால்தான் தேர்வு எழுத முடியும். இந்த நிலையில் மாணவிகள் உயர்த்தப்பட்ட விடுதிக் கட்டணத்தை கட்டாததால் கட்டண பாக்கி இல்லா சான்றிதழ் கொடுக்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துள்ளது. இதனால் மாணவிகள் தேர்வு நேரத்தில் திடீர் என்று எங்களால் எப்படி உயர்த்தப்பட்ட விடுதிக் கட்டணத்தை உடனே கட்ட முடியும். உயர்த்தப்பட்ட விடுதி கட்டணத்தை ரத்து செய்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று விடுதியின் உள்ளே வெள்ளிக்கிழமை இரவு உணவை தவிர்த்து நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த நிர்வாகம் மாணவிகளின் போராட்டத்தை ஒடுக்க மின்விளக்குகளை அணைத்துள்ளனர். இதனை கண்டுகொள்ளாத மாணவிகள் இருளிலும் செல்போன் விளக்குகளை எரியவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்தும் உயர்த்தப்பட்ட விடுதிக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.