கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழக தொழிலாளர் நல சங்கத்தின் தலைவர் ராஜா தலைமையில் 10- க்கும் மேற்பட்டவர்கள் சிதம்பரம் வட்டாட்சியர் ஆனந்தை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி ஊழியராக பணிபுரிந்து வருகிறோம்.
இதுவரை பல்கலைக்கழக நிர்வாகம் பணிநிரந்தரம் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. அரசு நிர்ணயித்த குறைந்தபட்சக் கூலியை கூட எங்களுக்கு தர மறுத்து வருகிறது. இதனால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்து வருகிறது. எனவே எங்கள் மனு மீது நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். மேலும் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இதுவரை நடைபெற்றுள்ள ஊழியர் சங்க தேர்தலில் நாங்கள் வாக்களித்துள்ளோம். எங்களில் பலர் தேர்தலில் வெற்றி பெற்று நிர்வாகிகளாக இருந்துள்ளனர்.
ஆனால் கடந்த தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்கும் உரிமையை ஊழியர் சங்கம் தடை விதித்து எங்களின் ஜனநாயக உரிமையை பறிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை எங்களுக்கு வழங்க வேண்டும். சேர்க்கப்பட்ட ஊழியர்களின் விவரம் வெளிப்படையாக வெளியிட வேண்டும். அதுவரை தேர்தல் தேதி அறிவிக்கக் கூடாது என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.