Skip to main content

"பெரியாரின் சிலைக்கு பாஜகவால் எந்த பாதிப்பு ஏற்படாது" - அண்ணாமலை

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

annamalai said BJP wont harm periyar statue

 

 

திருச்சியில் பாஜக விவசாய மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன் தலைமை தாங்கினர். இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, "மத்திய அரசு ஒரு லட்சம் கோடி விவசாய உட்கட்டமைப்பு நிதி ஒதுக்கி உள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் இனத் தலைவர்கள் அமர்வதற்கு இருக்கையும், தேசியக் கொடியை ஏற்றும் உரிமையும், பெயர் பலகையை வைக்க உரிமையும் மறுக்கப்படுகிறது. ஆனால் சமத்துவம், சமூக நீதி குறித்து இங்கு தான் அதிகம் பேசப்படுகிறது. எனவே இதில் தமிழ்நாடு முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 

 

போதைப்பொருளை ஒழிக்க முதல் கட்டமாக மதுபான கடைகளை மூட வேண்டும். டாஸ்மாக்கை மூடாமல் போதைப்பொருளை ஒழிக்க முடியாது. மின்சார திருத்தச் சட்டத்தால் யாருக்கும் எங்கேயும் பாதிப்பு ஏற்படுத்தாது.  அந்த சட்டத்தால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படும் எனக் கூறுவது தவறு. மின்சார பயன்பாடு குறித்த அளவீடு கணக்கெடுக்கப்படும். யாரும் யாருடன் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம். ரஜினி ஆளுநரை சந்தித்திருப்பதை வைத்து சிலர் அதை அரசியலாக்குகிறார்கள்.

 

ஆவின் தொடர்ந்து பால் விலையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறார்கள். ஆவின் விலை உயர்வு காரணமாக தான் தனியார் பால் நிறுவனங்கள் விலையை உயர்த்துகிறார்கள். மது விலக்கு தொடர்பாக ஒவ்வொரு மாநிலமும் அந்த அந்த மாநிலத்தின் நிலைமையை வைத்து முடிவெடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் மது அதிகப்படியாக விற்கப்படுகிறது. டாஸ்மாக்கால் தான் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது. எனவே தான் தமிழ்நாட்டில் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்கிறோம். கள்ளுக்கு அனுமதி வழங்கினால் அது விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். மதுக்கடையை படிப்படியாக மூடி விட்டு கள்ளுக்கடையை திறக்க வேண்டும்.

 

இந்தியாவில் சமூக சீர்த்திருத்ததிற்காக பெரியார் உள்ளிட்ட பலர் பாடுபட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வரும் போது ஆழ்வார்கள், நாயன்மார்கள் உள்ளிட்டவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம். அவர்களுக்கு சிலை வைப்போம். யாருடைய சிலையை எங்கே வைப்பது என்பதை முடிவெடுப்போம். பெரியாரை தாக்கி பேச வேண்டிய அவசியம் பா.ஜ.க விற்கு இல்லை. பெரியாரின் சிலைக்கு பா.ஜ.க வால் எந்த பாதிப்பும் ஏற்படாது. பெரியார் சமூகத்திற்கு பல்வேறு நன்மைகள் செய்துள்ளார். ஆனாலும் சனாதான தர்மத்தின் எதிர்ப்பையும் கடவுள் மறுப்பு கொள்கையில் பாஜக வேறுபடுகிறது" என தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்