முதல்வரின் எச்சரிக்கையை மனதில் வைத்து கவனமாக செயல்பட வேண்டும் என்ற உணர்வு கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும், உள்ளாட்சி மன்ற தி.மு.க. தலைவர்களுக்கும் இருப்பதாக தெரியவில்லை என்று கவலையுடன் நம்மிடம் கூறினார் கோவை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் கம்யூனிஸ்ட் தோழர் ஒருவர்.
மேலும் அவரே கோவை மாநகராட்சியில் நடந்த அந்த நிகழ்வைப் பற்றியும் விளக்கினார். “சென்ற 19 ஆம் தேதி கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் தி.மு.க. மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்களை பற்றி விவாதங்கள் நடைபெற்றது. கவுன்சிலர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து நடந்த மாமன்ற கூட்டத்தில் திமுகவை சேர்ந்த 49ஆவது வார்டு கவுன்சிலர் அன்னக்கொடி எழுந்து நின்று மேயரைப் பார்த்து 'மேயர் அவர்களே சாப்பாடு போட்டீங்க நன்றி... அப்படியே இப்போது தீபாவளி வருது தீபாவளிக்கு போனஸ் கொடுத்தால் பரவாயில்லை' என கோரிக்கை வைக்க, அடுத்த நிமிடமே மேயர் கல்பனா 'மாமன்ற உறுப்பினரின் கோரிக்கை படி நாளை அனைவருக்கும் போனஸ் வழங்கப்படும்' என கூட்டத்தில் வெளிப்படையாக அறிவித்தார்.
இது பெரும்பாலான கவுன்சிலர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அரசு, கவுன்சிலர்களுக்கு போனஸ் கொடுக்கும் வழக்கம் இல்லை. இந்த நிலையில் மேயர் போனஸ் கொடுக்கப்படும் என எப்படி அதுவும் கூட்டத்தில் வெளிப்படையாக அறிவித்தார்? என அதிர்ச்சியுடன் இருந்தனர். அதேபோல் அடுத்த நாள் 20ஆம் தேதி மேயர் கூறியது போல மாமன்ற உறுப்பினர்களுக்கு தலா 50,000 போனஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இது எந்த நிதியிலிருந்து வழங்கப்பட்டது என தெரியவில்லை. இந்த நிகழ்வுதான் இப்போது விவாத பொருளாகியுள்ளது.
உறுப்பினரின் கோரிக்கையும், மேயரின் அறிவிப்பும் வெளிப்படையாக நடந்தது. இதை முழுமையாக தவிர்த்திருக்க வேண்டும். இதைத்தான் முதல்வர் படுக்கை அறையிலும் பாத்ரூம்களிலும் தவிர மற்ற இடங்கள் எல்லாம் பொது இடம் என்றாகிவிட்டது. மூன்றாவது கண் இருக்கிறது. எல்லோரும் எச்சரிக்கையாக கவனமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். ஆனால் இந்த அறிவிப்புகள் இப்படிப்பட்ட தி.மு.க.நிர்வாகிகள் காதில் விழவில்லையா? இப்படி வெளிப்படையான நிகழ்வுகளைத் தொடர்ந்து திமுகவினர் செய்வதால் தான் தலைமைக்கு கெட்ட பெயர் உண்டாகிறது'' என அந்த தோழர் வேதனையுடன் கூறினார்.
உள்ளாட்சி மன்றத்தில் பேசுவது சட்டசபையில் பேசுவது போல அனைத்துமே பதிவுகள் தான். இது ஏதோ விளையாட்டு மைதானம் போல நினைத்து செயல்படக்கூடாது. தி.மு.க. மூத்த நிர்வாகிகளாவது இப்படிப்பட்டவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும் என்கின்றனர் மாற்றுக் கட்சியினர்.