![Ambulance worker spreading corona ... Karur sad!](http://image.nakkheeran.in/cdn/farfuture/hKnOaS0UIVlOQRmxEg0HdZ2I14PsSv9MFT4njumXecg/1588677150/sites/default/files/inline-images/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D.jpeg)
உலகமே கரோனா தொற்றினால் அலறிக்கொண்டு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானது. அதைத்தொடர்ந்து மருத்துவர்களின் தொடர் முயற்சியில் கரூர் கரோனா இல்லாத மாவட்டமாக அறிவித்த நிலையில், நோய் தொற்று பரிசோதனைக்கு உட்பட்ட ஒருவர் தனிமைப்படுத்தலில் இல்லாமல் ஊருக்கு சென்றதால் நோய் தொற்று ஏற்பட்டு அவர் மீது நோய் பரப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சென்னையில் 108 ஆம்புலன்ஸில் ஊழியராக இருந்த ஒருவர், பெங்களுரில் பயிற்சிக்கு சென்று திரும்பினார். அப்போது அவருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நோய் தொற்று இல்லை என்று தெரிந்ததும் அவரை சொந்தவூரான கரூருக்கு மாற்றல் வேண்டும் என்று கேட்டு சென்று உள்ளார்.
அவர் சென்னையில் இருந்து கரூர் திரும்பியவுடன் இங்கிருந்த சுகாதார துறை அதிகாரிகள் கரோனா தொற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர் என்பதால் அந்த ஆம்புலன்ஸ் ஊழியரை வீட்டில் 24 நாட்கள் வீட்டில் இருக்க அறிவுறுத்தி நோட்டீஸ் ஒட்டி சென்றனர்.
இந்த நிலையில் அவர் அரசு அதிகாரிகள் சொல்வதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் சொந்தவூரான சின்னவரப்பாளையத்தை விட்டு வெளியேறி அவர் வெள்ளியணை 108 ஆம்புலன்ஸில் வேலைக்கு சென்று உள்ளார். அதே நேரத்தில் நண்பர்களுடன் வெளியே ஊர் சுற்றியதும், தோப்பில் சென்று பிரியாணி சமைத்தும், கேக் ஊட்டியும் செம ஜாலியாக கொண்டாடியிருக்கிறார்.
இந்த நிலையில் கொண்டாட்டத்தின் அடுத்த நாள் அந்த ஊழியருக்கு லேசான காய்ச்சலும், முச்சுத்திணறலும், இருமலும் வந்ததை தொடர்ந்து பயந்து போய் மருத்துமனைக்கு சென்று பரிசோதனை செய்திருக்கிறார்கள். இந்த பரிசோதனையில் கரோனா தொற்று பாதிப்படைந்து இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறையினர் உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றனர்.
இது குறித்து கடம்பங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பெயரில், வா்கல் போலீசார் ஆம்புலன்ஸ் ஊழியர் மீதும், அவருக்கு வேலை கொடுத்த திருச்சி 108 ஆம்புலன்ஸ் திட்ட மேலாளர் அறிவுக்கரசு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது தொற்று நோய் தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் ஊழியர்கள், அவரின் பெற்றோர், ஊரில் அவருடன் பழகியவர்கள், வெள்ளியணையில் வேலை செய்தபோது அவரிடம் தொடர்பில் இருந்தவர்கள் என 130 பேருக்கு கரோனா நோய் தொற்று பரிசோதனை செய்து வருவதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் செல்வக்குமார் தெரிவித்தார்.
![Ambulance worker spreading corona ... Karur sad!](http://image.nakkheeran.in/cdn/farfuture/K_vX6NvOiUO0N74jgrS23eydqqMSUR9xKjf6I3XNgEY/1588677208/sites/default/files/inline-images/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88.jpeg)
இதே போன்று சென்னை கோயம்பேடு மார்கெட் பகுதியில் வேலை செய்த கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த 19வயது வாலிபர் சென்னையிலிருந்து திருச்சி வந்து இங்கிருந்து லாரி மூலம் மணல்வாசி சுங்கசாவடி வழியே சென்று உள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் மாயனூர் காவல்நிலையத்திற்கு புகார் செய்துள்ளனர். உடனே சுகாதாரதுறையினர் உடனே அந்த வாலிபரை பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் பிறகு கரூர் மாவட்டத்தை சுற்றி 18 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதில் சென்னை கோயம்பேட்டிலிருந்து மட்டும் 42 பேர் வந்துள்ளனர். இதில் 1 வாலிபருக்கு மட்டும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள 41 பேரின் சளி மற்றும் ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வீட்டில் தனித்து இருக்க வேண்டியவர்கள் இந்த கால கட்டத்தில் வெளியே சுற்றுவதன் மூலம் இந்த தொற்றை மக்கள், மக்களுக்கே பரப்பி விடுவது பெரிய வேதனையான செய்தி.