கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக குண்டடிபட்டு உயிர் தியாகம் செய்த மாணவர் ராஜேந்திரன் சிலை அண்ணாமலை பல்கலைக்கழக வாயிலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்துவார்கள்.
இந்த நிலையில் சனிக்கிழமை அன்று 55 ஆம் ஆண்டு மொழிப்போர் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் காலையில் முதன்முதலில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து காலை 10- மணி அளவில் அதிமுக கட்சி சார்பில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ பாண்டியன் தலைமையில் காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்எல்ஏ முருகுமாறன், மாவட்ட ஊராட்சி தலைவர் திருமாறன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் உள்ளிட்ட கட்சியினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர்.
அப்போது அதிமுகவை சேர்ந்த கட்சியினர் மாணவர்கள் காலையில் அணிவித்த மாலையை ஓரமாக கழட்டி வைத்துவிட்டு மாலை அணிவித்தனர். இதனால் மாணவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டு கண்டனம் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் அணிவித்த மாலை மீது ஏன் மாலை அணிவிக்க கூடாது என்ற கேள்வியும் எழுப்பியுள்ளனர்? இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பில் மாலை அணிவிக்க வந்த மாணவர்களை காவல்துறையினர் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பாதகைகளை வைத்துக்கொண்டு மாலை அணிவிக்க கூடாது என்று தடுத்து நிறுத்தினர்.
இதன்பிறகு மாலை அணிவிக்க அனுமதித்தனர். இதனால் மாணவர்கள் மத்தியிலும் காவல்துறையினருக்கும் சிறு சலசலப்பு ஏற்பட்டது.