கொளத்தூர், திருச்சி மேற்கு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை, காட்பாடி ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் திமுக பணப்பட்டுவாடா செய்வதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார் ராயபுரம் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ஜெயக்குமார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜெயக்குமார், "வாக்காளர்களுக்கு திமுகவினர் பணப்பட்டுவாடா செய்கின்றனர். ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் கூகுள் பே மூலம் நவீன முறையில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணப்பரிமாற்றம் செய்து வருகின்றனர். திருமங்கலம் ஃபார்முலாவை திமுக இன்னும் பின்பற்றுகிறது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி செயல்படக் கூடிய தனியார் தொலைக்காட்சியைத் தடை செய்ய வேண்டும். கொளத்தூர், திருச்சி மேற்கு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை, காட்பாடி ஆகிய தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஜனநாயகத்தைப் பணநாயகத்தால் வென்றுவிடலாம் என திமுக நினைக்கிறது" என குற்றம்சாட்டினார்.