நடிகர் தனுஷ் ஆஜராவதில் இருந்து விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'வேலையில்லா பட்டதாரி' படத்தில் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறைக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து, சென்னையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை நடிகர் தனுஷ், படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், சம்மன் மற்றும் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை எதிர்த்தும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும் நடிகர் தனுஷ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சதீஸ்குமார் முன்பு இன்று (01/08/2022) காலை விசாரணைக்கு வந்த போது, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து நடிகர் தனுஷுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 10- ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
ஏற்கனவே, படத்தின் தயாரிப்பாளரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனக்கு எதிரான வழக்கு, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்த உயர்நீதிமன்றம், அவரது வழக்கை, ஆகஸ்ட் 10- ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.