சுதந்திரப் போராட்ட தியாகியும், தகைசால் தமிழருமான தோழர் சங்கரய்யா 102 வயதில் சென்னையில் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார். இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று அவரது உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து சங்கர் ஐயாவின் மறைவிற்கு தமிழக முழுவதும் இரங்கல் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடலூரில் சங்கரய்யாவின் மறைவிற்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமை தாங்கினார். இதில் கடலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கலந்துகொண்டார்.
இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ. ஐயப்பன், “தோழர் சங்கரய்யா கொள்கைக்காக வாழ்ந்தவர். திமுக தலைவர் கலைஞருடன் மிகவும் நெருக்கமாக இருந்து அடித்தட்டு ஏழை பாட்டாளி வர்க்கத்திற்கும் விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களுக்காகவும் பாடுபட்டவர். தனக்கென்று எதையும் அவர் தலைவரிடம் கேட்டதில்லை. மார்க்சிய கொள்கையில் உறுதியாக கடைசிவரை இருந்த மகத்தான தலைவர்.
இவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆளுநர் ரவி மறுத்துவிட்டார். அப்படி வழங்கி இருந்தால் ஆளுநர் மாளிகைக்கே பெருமை கிடைத்திருக்கும். அந்த பெருமையை ஆளுநர் இழந்துவிட்டார். அவரைப் போல் அனைவரும் கொள்கை பிடிப்புடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்” என சங்கரய்யாவுக்கு புகழஞ்சலி செலுத்தினார். இந்தக் கூட்டத்தின் போது சிதம்பரம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. ஆனால், அந்த மழையையும் பொருட்படுத்தாமல் பல்வேறு கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டு கொட்டும் மழையில் தகைசால் தமிழர் சங்கரய்யாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.