எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவு செய்துள்ள 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு ஜூன் 4ம் தேதி அறிவித்தது. மேலும் இதுதொடர்பாக அரசியலமைப்பு சட்ட பிரிவு 161-ன்படி, மாநில ஆளுநருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியும், உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படியும் அரசாணைகள் மூலம் நெறிமுறைகள் குறித்த ஆணைகள் வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிடட்டிருந்தது.
இதில் முதற்கட்டமாக கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகள் 67 பேரை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதில் ஆதாயக் கொலை, போதைப் பொருள் கடத்தல், வெடிபொருட்கள் பதுக்கல், அரசு சொத்துகளை சேதப்படுத்தியது, உள்ளிட்ட குற்றங்களில் கைதானவர்கள் முன் விடுதலைக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்றும் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் முன் விடுதலை கிடையாது என்றும் கூறியுள்ளது. இதன் அடிப்படையில், சிறையில் உள்ள நன்னடத்தை பரிந்துரைக் குழு தயார் செய்த பட்டியலின் படி புழல் சிறையில் உள்ள 67 கைதிகளும் இன்று காலை 10.30 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.
ஆயுள் கைதிகளை விடுவிக்கும் இந்த நிகழச்சியில் ஏடிஜிபி அசோக் சுக்லா மற்றும் டிஐஜி முருகேசன் கலந்து கொண்டு விடுதலையாகும் கைதிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினர். இவர்களை அழைத்து செல்ல அவர்களது குடும்பத்தினர் வந்துள்ள நிலையில் விடுதலையாகும் கைதிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் விழாவில் செய்தியாளர்களை சந்தித்த சிறைதுறை தலைவர் பேசுகையில், தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொண்டார். அதன் பின்பு விடுதலையாகும் அனைவரும் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் செயல்பட வேண்டும் எனவும் குற்ற செயல்களில் ஈடுப்பட கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் விடுவிக்கப்பட்டவர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.