தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு புகழாரம் சூட்டி வருகிறாரே... இந்த மூத்த அமைச்சருக்கு அப்படி என்ன நிர்பந்தம்? என அமைச்சர் செங்கோட்டையன் பற்றி ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.வினர் வெளிப்படையாகவே பேசத் தொடங்கி விட்டனர். சமீபகாலமாக நம்ம முதல்வர் ராசியான முதல்வர் என ஒவ்வொரு விழாவிலும் பேசி வரும் செங்கோட்டையன் இன்று நடந்த மரம் நடும் விழாவிலும் புகழ்ந்து தள்ளினார்.
ஈரோடு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், சித்தோடு அருகே உள்ள கன்னிமார் கரடு என்ற பகுதியில் ஜி.கே. மூப்பனார் பிறந்த நாள் விழா, விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்விற்கு த.மா.க. மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பல்வேறு வகையிலான விதைகளை மண்ணில் தூவிவிட்டு சில மரக் கன்றுகளையும் நட்டார் அமைச்சர் செங்கோட்டையன்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் பள்ளி கூடங்கள் திறப்பது குறித்து நேற்று துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தோம். அதில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பிறகு தான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். அப்போதும் அது குறித்து முடிவை நமது முதலமைச்சர் தான் அறிவிப்பார். அதேபோல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தற்போதைய நிலையே தொடரும். அதில் மாற்று வழிக்கு வாய்ப்பே இல்லை.
நமது தமிழ்நாட்டில், கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு விவசாயி நமது முதலமைச்சர் அவரது தலைமையில் ஆட்சி நடப்பதால்தான் விவசாய குடும்பங்கள் நலன் பெறுகிறது. இப்போது தமிழகத்தில் நல்ல ஆட்சி நடக்கிறது. இந்த பொன்னான ஆட்சியில்தான் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை மூன்றாவது முறையாக நிறைந்துள்ளது. அதேபோல் நமது மேட்டூர் அணை 300 நாட்களுக்கு மேல் 100 அடியாகவே உள்ளது. அடுத்து கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு மண்டலம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பல லட்சம் மரக்கன்றுகளை நட்டார். அவர் வழியில் நடைபெறும் இப்போதைய ஆட்சியில் பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பசுமைப் புரட்சி உருவாகும்." என அவர் கூறிக்கொண்டே போக, விழாவில் கலந்து கொண்ட எம்.எல்.ஏக்கள், கே.வி ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் அண்ணனுக்கு இன்றைய கோட்டா ஓவர் எனச் சொல்லாமல் சொல்லி நடக்க தொடங்கினார்கள்.