![4 arrested for running illegal mobile abortion center](http://image.nakkheeran.in/cdn/farfuture/GlyhqB1hprAJbapmr8glUtfVxqUHncmjGx4KpTxTPGA/1706959811/sites/default/files/inline-images/Untitled-1_683.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் அசக்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன்(34). இவர் தனியார் மருந்தகம் நடத்தி வருகிறார். அந்த மருந்தகத்தில் அசக்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுரு என்பவரது மனைவி கௌதமி (வயது 29) இங்கு வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், இந்த மருந்தகத்தில் சட்ட விரோதமான முறையில் கருவுற்ற தாய்மார்களுக்கு கருக்கலைப்பு நடைபெற்று வருவதாக வேப்பூர் தலைமை மருத்துவர் அகிலனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர் வேப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், நேற்று வேப்பூர் போலீசார் நேரில் சென்றபோது மருந்தகம் வெளியே நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரின் உள்ளே வயிற்றில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறியும் கருவி மற்றும் மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்ய தேவையான மருந்துகள் மற்றும் மாத்திரைகள் அனைத்தும் காருக்குள் இருந்துள்ளன. அவற்றை கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில், அசக்களத்தூரை சேர்ந்த புரோக்கர்கள் ராமலிங்கம் மகன் தினேஷ் (வயது 22) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த குமாரசாமி மகன் கண்ணதாசன் (வயது 29) ஆகியோர் மருந்தகத்தில் இருந்துள்ளனர். இவர்கள் நான்கு பேரையும் வேப்பூர் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சட்ட விரோதமான முறையில் கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண்களை அழைத்து வந்து கருக்கலைப்பு செய்தது தெரியவந்துள்ளது. இவர்கள் நான்கு பேர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். இவர்கள் கருக்கலைப்பு செய்ய பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் மற்றும் ஸ்கேனர் இயந்திரம் உட்பட அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
கருவுறும் பெண்கள் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறிவதற்காக நிரந்தரமான கட்டடங்களை மருத்துவ வசதி ஏற்படுத்தி ஆய்வு செய்தால், அதை போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதற்காக காரில் அனைத்து வசதிகளையும் தயார் செய்து, நடமாடும் கருக்கலைப்பு செய்து நூதன முறையில் செயல்பட்டு வந்துள்ளனர். இதுபோன்ற கும்பல்கள் சட்ட விரோதமான முறையில் கருக்கலைப்பு செய்து வருவதைத் தொடர்ந்து நக்கீரன் இதழில் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கருக்கலைப்பு செய்யும் கும்பல் எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும் அதையும் மீறி அவர்கள் தொழிலை தொடர்ந்து செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.