
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளை திறந்ததாகக்கூறி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணையை தொடர்ந்து இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, அதிமுக சார்பில் 25 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதேபோல் இந்த சம்பவத்திற்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் உயிரிழந்த இந்த நிகழ்வு துரதிஷ்டவசமானது. மக்களின் நம்பிக்கைக்குரிய வகையில் பணியாற்றி அதிமுக அரசு நீதியை நிலைநாட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.