Skip to main content

சுபஸ்ரீ வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலருக்கு நிபந்தனை ஜாமின்!

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

சென்னை உயர் நீதிமன்றம், சுபஸ்ரீ வழக்கில் கைதான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.  
 

கடந்த செப்டம்பர் 12 -ஆம் தேதி,  சென்னை பள்ளிக்கரணையில் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறி உடல் நசுங்கி பலியானார். இச்சம்பவம் தொடர்பாக, அதிமுக நிர்வாகி ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவானது. 

chennai subshree incident high court order


இவ்வழக்கில் செப்டம்பர் 27-ஆம் தேதி இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர். ஜாமின் கோரி இவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதால், அவற்றை தள்ளுபடி செய்து ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது சென்னை உயர் நீதிமன்றம். இந்நிலையில், ஜெயகோபால் மற்றும் மேகநாதன் தரப்பில் ஜாமின் கோரி மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 45 நாட்களுக்கும் மேலாக மனுதாரர்கள் சிறையில் இருப்பதாகவும், எந்த நிபந்தனை விதித்தாலும் பின்பற்றுவதற்கு  தயாராக இருப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

chennai subshree incident high court order


பின்னர் நீதிபதி, விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதாக இரு நீதிபதிகள் அமர்வில் தெரிவிக்கப்பட்டதே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதா என, அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, குற்றப்பத்திரிக்கை பரிசீலனையில் இருப்பதாக அரசுத்தரப்பில் விளக்கம் அளித்தனர். 

chennai subshree incident high court order

 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயகோபாலுக்கும், மேகநாதனுக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.  ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை கேன்சர் மருத்துவமனைக்கும், ஸ்டான்லி மருத்துவமனைக்கும் ஜெயகோபால் தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். ஆலந்தூர் நீதிமன்றத்திலிருந்து சம்மன் வரும் வரை, மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும். ஆலந்தூர் நீதிமன்றம் சம்மன் பெற்று ஆஜரான பின், பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும். மேகநாதனைப் பொறுத்தவரை, பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்