புல எண் விபரம், சொத்து வரி உரிமம் கேட்டும், பிறப்பு, இறப்பு சான்றிதழ் மற்றும் பதிவின் பொருட்டு ஆவணங்களை மக்களுக்குத் தரவேண்டிய கடமை நகராட்சி அதிகாரிகளின் வரம்பில் வருகிறது. ஆனால் அவைகளைப் பெறுவதற்காக சாதாரண ஜனங்கள் நடையாய் அலைய வேண்டிய நிர்ப்பந்தம். ஒரு அதிகாரி இருந்தால் மற்றொரு அதிகாரி இருக்க மாட்டார். அப்படியே அதிகாரியைச் சந்தித்தாலும், சட்ட திட்டங்கள், பைலாக்களைச் சொல்லுவதுண்டு. ஆனால் இந்த சட்ட அளவு கோல்கள் சாதாரண சிட்டிசனுக்கு மட்டுமே. அதிகாரிகளுக்கெல்லாம் கிடையாது என்பதை வெளிப்படையாக உணர்த்தியிருக்கிறது ஒன்று.
தூத்துக்குடி மாவட்டத்தின் காயல்பட்டினம் நகராட்சியின் பொறுப்பு கமிசனர் பணியிலிருப்பவர் அதன் பொறியாளர் ஒருவர். அங்குள்ள நகராட்சியில் பெண் ஊழியர்கள் உள்ளிட்ட 30 பேர்களுக்கும் மேல் பணியில் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்குள்ள ஊழியர் ஒருவரின் பிறந்த நாள் தொடர்பான நிகழ்ச்சியை அலுவலகத்தில் வைத்து சில ஊழியர்கள் நடத்தியுள்ளார்களாம். அது தொடர்பான வீடியோ டிக்டாக் செயலி மூலம், முகநூல் வாட்ஸ் அப்களில் வைரலாகி இருக்கிறது. அது குறித்து விசாரித்து அறிக்கை அனுப்ப நகராட்சி ஆணையருக்கு மாவட்டக் கலெக்டர் சந்திப் நந்தூரி உத்தரவிட்டிருக்கிறார். விசாரணை நடத்திய அதன் பொறுப்பு ஆணையர் பொறியாளர் அறிக்கையை கலெக்டரிடம் தாக்கல் செய்திருக்கிறார்.
மேலும் டிக்டாக் விவகாரத்தில் சிக்கிய பெண்கள் உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள் ஏழுபேரையும் நெல்லை நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குனர் தனது அலுவலகத்திற்கு வர வழைத்து நேரடி விசாரணை நடத்தியிருக்கிறார். இவர்கள் மீது நடவடிக்கை பாயலாம் என்று நகராட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதனிடையே பொறுப்பு பொறியாளர் சரேஷை நெல்லை மாவட்டம் புளியங்குடிக்கும், அங்கிருந்த பொறியாளர் புஸ்பலதா காயல்பட்டினத்திற்கு புதிய பொறுப்பாளராக மாற்றம் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.