நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.