ஈரோட்டில் 17 வயது சிறுமியைக் கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். 41 வயதான இவர் டிரைவராக தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படித்து வந்த 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடத்திச் சென்று பரமத்தி வேலூரில் கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ், கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்த பின்னர் பாலியல் வன்கொடுமை செய்த டிரைவர் கணேசனை கைது செய்தனர். இது குறித்த வழக்கு விசாரணை ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி, 17 வயது சிறுமியைக் கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த கணேசனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும் தீர்ப்பு அளித்தார்.