![2 children incident in illicit relationship; North State youth frenzy](http://image.nakkheeran.in/cdn/farfuture/evxD5iVjvVITBA9dO0L4VTxClP0o3ovVJZYCsII6Lu8/1675857557/sites/default/files/inline-images/n223269.jpg)
திருவள்ளூரில் வடமாநில இளைஞர் ஒருவர் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணை வெட்டி விட்டு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்துள்ள ஜெகநாதபுரம் சத்திரம் பகுதியில் பீகாரை சேர்ந்த குட்லு என்ற இளைஞர் வீடு எடுத்து தங்கி, அருகில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்துள்ளார். உடன் பணியாற்றும் அசாமை சேர்ந்த நபர் மனைவி, குழந்தைகளுடன் அருகில் உள்ள இருளப்பட்டு பகுதியில் வசித்து வந்தார். நேற்றிரவு வீட்டுக்கு சென்ற குட்லுவின் நண்பர் வீட்டில் மனைவியும் குழந்தையும் இல்லாததைக் கண்டு அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார். குட்லு வீட்டிற்கு மனைவியும் குழந்தையும் சென்றதாக பக்கத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
இதனால் மனைவியையும் குழந்தைகளையும் தேடி குட்லு வீட்டிற்கு சென்றபோது குழந்தைகள் இரண்டும் வாய் கட்டப்பட்ட நிலையிலும், மனைவி ரத்த வெள்ளத்திலும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். இது குறித்து சோழபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேநேரம் உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில், திருமணமாகாமல் இருந்த குட்லு, உடன் பணியாற்றும் நண்பரின் மனைவியுடன் முறையற்ற தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்தது. இன்று அப்பெண் குட்லு வீட்டிற்குச் சென்றபோது தகராறு ஏற்பட்டதால், இரண்டு குழந்தைகளையும் தலையில் அடித்துக் கொன்றுவிட்டு, அப்பெண்ணை வெட்டி விட்டுத் தப்பிச்சென்றது தெரியவந்தது. கொலைச்சம்பவத்தில் ஈடுபட்ட குட்லுவை போலீசார் தேடி வருகின்றனர். குட்லு முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணை சைக்கிளில் தொடர்ந்து செல்லும் சிசிடிவி காட்சி ஒன்றும் வெளியாகியுள்ளது.