12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக் கண்ணன், “தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுக் குறைந்து இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வட தமிழகம் புதுவை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடல் பகுதிக்குச் செல்லும்.
கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை தமிழகம் புதுவையில் மிகத் தீவிரமாக இருந்துள்ளது. 6 இடங்களில் அதிக கனமழையும் 16 இடங்களில் மிகக் கனமழையும், 108 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சீர்காழியில் 44செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. இது கடந்த 122 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழையாகும்.
தமிழகம் புதுவை பகுதிகளில் 12 மற்றும் 13 தேதிகளில் பரவலாகவும் 14 மற்றும் 15 தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழையும் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மற்றும் வட உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்” எனக் கூறினார்.