திருச்சியின் மிக முக்கியான இடமான மேலரண்சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 3 ஆயிரத்து 889 சதுர பரப்பளவில் 1905 ஆண்டு சிட்டிகிளப் என்று பொழுதுபோக்கு இடம் 87 ஆண்டுகளுக்கு வாடகை அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்டது.
இந்த கிளப்பில் அப்போதைய திருச்சி தேவர் முதல் தற்போதைய அமைச்சர் நடராஜன் வரை அனைத்து அரசியல்வாதிகளும் வந்துசென்ற இடம். குறிப்பாக அன்பில் தர்மலிங்கம் அன்பில் பொய்யாமொழி, பரணிகுமார், மலர்மன்னன் என நகரின் முக்கியமான தொழில் அதிபர்கள் எல்லோரும் இங்கே தான் பொழுதை கழிப்பார்கள். டென்னீஸ், செஸ், பில்லியர்ட்ஸ், உள்ளிட்ட உள்ளரங்கு விளையாட்டுகள் அனைத்தும் இங்கே நடக்கும்.
1989 ம் ஆண்டு 85 ஆண்டுக்கான குத்தகை முடிந்த போது மேலும் 25 ஆண்டுகள் ஒப்பந்தம் நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் நகரின் முக்கியமான பகுதியில் இருப்பதால் மாநகராட்சியின் விரிவாக்கத்திற்கு தேவைப்படுகிறது என்று 2013ம் ஆண்டு குத்தகையை ரத்து செய்யப்பட்டு 3 மாதங்களுக்குள் காலி செய்ய சொல்லி சிட்டி கிளப் நிர்வாகத்திற்கு நோட்டிஸ் அனுப்பினார்கள்.
இந்த நோட்டிஸ் எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால் குத்தகை உரிமத்தை புதிப்பிக்க இவர்கள் விண்ணப்பம் செய்யவில்லை.
இதன் பிறகு கடந்த 2018 டிசம்பர் மாதம் 7ம் தேதி இந்த இடத்தை காலி செய்வதற்கு மீண்டும் நோட்டிஸ் வழங்கப்பட்டது. இதற்கு இடையில் இந்த இடத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பன் அடுக்கு வாகனம் நிறுத்தும் இடம், அடுக்குமாடி, வணிகவளாகம் ஆகியவற்றை கட்ட டெண்டர் விடப்பட்டது.
மாநகராட்சியின் நோட்டிஸ் எதிர்த்து சிட்டி கிளப் சார்பில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து கடந்த மார்ச் மாதம் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் இன்று காலை 6.00 மணிக்கு இடத்தை சீல் வைத்து இடிக்க போகிறோம். அதற்குள் காலி செய்யவும் என்று நேற்று 17.05.2019 மாலை நோட்டிஸ் கொடுத்தனர். இதை சிட்டி கிளப் நிர்வாகத்தினர் வாங்க மறுத்ததால் அதை சுவற்றில் ஒட்டினார்கள் மாநரகராட்சி அதிகாரிகள்.
இந்த கிளப் குறித்து தற்போதைய தலைவர் கேசவன், “சிட்டி கிளப் 110 ஆண்டுகள் பழமையானது. இதன் உறுப்பினர்களுக்கு மட்டும் இன்றி கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி அவர்களை ஊக்குவித்து வருகிறோம். மாநகராட்சியின் உத்தரவுக்கு எதிரான வழக்கு மதுரை ஐக்கோர்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தான் மாநகராட்சி காலி செய்ய கோரிய நோட்டிஸ்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்தது. திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன் உள்நோக்கத்தோடு செயல்படுகிறார். குறிப்பிட்ட கால அவசகாசம் கொடுக்காமல் காலி செய்ய சொல்லியிருக்கிறார்” என்றார். இதை எதிர்த்து கண்டிப்பாக நீதிமன்றம் செல்வோம் என்றார்கள்.
இதற்கு இடையில் இன்று 18.05.2019 காலை 6.00 மணிக்கு மாநகராட்சி ஊழியர்கள் 100 பேர் துணையோடு, பாதுகாப்புக்கு நுற்றுக்கணக்கான போலீசார் உதவியோடு 110 ஆண்டுகால சிட்டி கிளப் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. திருச்சியின் பெரும் பணக்காரர்கள் உறுப்பினர்களாக இருக்கும் இந்த கிளப் இடிக்கப்படும்போது வெகு சிலரே வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இடிக்க கூடாது என்று போராட்டம் நடத்தியவர்களை கைது செய்த பின்பு அந்த கிளப் முழுவதையும் இடித்து தள்ளினார்கள்.