தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கான பிரச்சாரம் நாளை மறுநாளுடன் (04/04/2021) நிறைவடைகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள், தொண்டர்கள் ஆகியோர் பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் பேசும்போது, ‘தூக்கிப்போட்டு மிதித்தால் பல் உடையும்’ என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை விமர்சித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அண்ணாமலையின் பேச்சுக்கு திமுகவின் முக்கியத் தலைவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர்.
திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டிய புகாரில் அண்ணாமலை மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.