உத்தரப் பிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தில் மகளிர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன் தினம் அந்த பள்ளியில் தேர்வு நடந்தது. பள்ளி வகுப்பறையில் தேர்வை எழுதிக் கொண்டிருந்த அந்த மாணவிக்கு, திடீரென மாதவிடாய் ஏற்பட்டது. இதனால், பள்ளி தலைமை ஆசிரியையிடம் சென்று அந்த மாணவி தனக்கு நாப்கின் வழங்குமாறு கேட்டுள்ளார்.
ஆனால் அந்த தலைமை ஆசிரியை, மாணவிக்கு நாப்கின் வழங்காமல் வகுப்பறையில் இருந்து அவரை வெளியேற்றினார். மேலும், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அந்த மாணவியை வெளியே நிற்க வைத்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த அந்த மாணவி, தனது வீட்டிற்கு வந்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரின் தந்தை, இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர், கல்வி அதிகாரி, பெண்கள் நலத்துறை மற்றும் மகளிர் ஆணையத்துக்கு புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், இந்த விவகாரம் தொடர்பாக கல்வி அதிகாரிகள் தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நாப்கின் கேட்ட மாணவியை வகுப்பறையை விட்டு வெளியேற்றிய சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.