Skip to main content

எப்.ஐ.ஆர். வெளியான விவகாரம்; உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 27/01/2025 | Edited on 27/01/2025
 Supreme Court barrage of questions for FIR published Issue

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.  அதே சமயம் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அதன்படி வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. மாணவியின் அடையாளத்தை எப்.ஐ.ஆர்.இல் குறிப்பிட்டது சட்டப்படி தவறு என்பதால் எந்த கட்டணமும் வசூலிக்காமல் மாணவி படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும்.

எப்.ஐ.ஆரை வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாகச் செய்தியாளர் சந்திப்பை நடத்தச் சென்னை காவல்துறை ஆணையர் அருண் தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை எனவே அவர் மீது சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர். இத்தகைய சூழலில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அதாவது முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக மட்டுமே தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

அந்த மனுவில், “பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் வெளியானதுக்கு காவல்துறை பொறுப்பாகாது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பாஜக சார்பில் ஏற்காடு மோகன்தாஸ், அதிமுக சார்பில் ஜி.எஸ். மணி ஆகியோர் கேவியட் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில், “தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் தங்களை விசாரிக்காமல் தீர்ப்பு தரக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனு இன்று (27.01.2025) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “எப்.ஐ.ஆர். ஆவணத்தை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்யும் வகையில் எவ்வளவு நேரம்  இருந்தது?. மாணவி தொடர்பான விவரங்களை வெளியிட்டது யார்?. எப்.ஐ.ஆர். கசிந்த விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?. மாணவியின் தரவுகள் தற்போதும் சமூக வலைதளங்களில் உள்ளதா? சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு சார்பில், “ "மாணவியை பாதுகாக்க அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயாராக இருந்தோம்.எப்.ஐ.ஆரை பதிவிறக்கம் செய்ய மத்திய அரசின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு தமிழக காவல்துறை அதிகாரி என்ன செய்வார்?” என வாதிடப்பட்டது.

 Supreme Court barrage of questions for FIR published Issue

இதனைப் பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், “எப்.ஐ.ஆரை பாதிக்கப்பட்ட மாணவிக்கு கொடுக்கும் போது உரிய ஆலோசனை கொடுத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் மீது பழி சுமத்தும் வகையில் உணர்ச்சியற்ற முறையில் எப்.ஐ.ஆரை எழுதியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு குழு விசாரணைக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக 25 லட்ச ரூபாயை முதல் தகவல் அறிக்கை கசிந்ததற்கு காரணமானவர்களிடமிருந்து இழப்பை பெற்று தர உத்தரவிடப்படுகிறது. சென்னை காவல்துறை ஆணையருக்கு எதிரான உயர்நீதிமன்ற கருத்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுகிறது. சிறப்பு குழு விசாரணைக்கு தற்போதைய உத்தரவு குறுக்கே இருக்காது” எனத் தெரிவித்தனர். 

சார்ந்த செய்திகள்