Skip to main content

“கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும்” - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/01/2025 | Edited on 27/01/2025
Party flagpoles should be removed High Court order

மதுரையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் பலர் தங்களது கட்சிக்கொடி கம்பங்களை அமைக்க அனுமதி வழங்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு விண்ணப்பித்திருந்தனர். அதற்கு மாநகராட்சி சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து கட்சிக்கொடி கம்பங்களை அமைக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

இதில் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நீதி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது, “தமிழகத்தில் அரசியல் கட்சியின் கொடிக் கம்பம் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து 114 வழக்குகள் பதிவாகியுள்ளன” எனத் தெரிவித்தனர். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி இளந்திரையன், “தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சி, அது சார்ந்த இயக்கங்கள், மத ரீதியான அனைத்து கொடிக்கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். அதே சமயம் இனி பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு வருவாய்த்துறையினர் அனுமதிக்கக் கூடாது.

பட்டா நிலங்களில் கொடிக்கம்பங்கள் அமைப்பது குறித்து அரசு உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும். கொடிக் கம்பங்களுக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தக் கூடாது என்ற உறுதிமொழியையும்,  வைப்புத் தொகையும் வசூல் செய்ய வேண்டும். இந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும். இந்த நீதிமன்ற உத்தரவு முறையாகக் கடைப்படுகிறதா என்பதைத் தமிழக அரசின் தலைமைச் செயலர் உறுதிப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார். அதோடு கொடிக்கம்பம் அனுமதி கோரிய அனைத்து மனுக்களையும் நீதிபதி  தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

சார்ந்த செய்திகள்