கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டை பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு ரத்து செய்திருந்தது. மேலும் அவர்களை 10 சதவீத இட ஒதுக்கீட்டு பிரிவுக்கு மாற்றியது. அதாவது, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு பதிலாக அவர்கள் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவு (இ.டபிள்யூ.எஸ்.) இட ஒதுக்கீட்டிற்கு மாற்றப்பட்டுள்ளனர். அதில் 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கிறது. மேலும் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீடு இனி ஒக்கலிகர்கள் மற்றும் லிங்காயத் சமூகத்தினருக்கும் கூடுதலாக தலா 2 சதவீதம் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் பசவராஜ் பொம்மை அரசு அறிவித்திருந்தது.
இஸ்லாமியருக்கு வழங்கப்பட்டு வந்த 4% இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு 2 பழங்குடியின சமூகத்தினருக்கு தலா 2% உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாரா சமூகத்தினர் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உள் ஒதுக்கீடு தொடர்பாக, ஏ.ஜே.சதாசிவ குழுவின் அறிக்கையை அமல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் மாநில அரசின் முடிவை எதிர்த்து போராட்டம் செய்த பஞ்சாரா சமூகத்தினர், இட ஒதுக்கீட்டிற்காக பல நாட்களாக போராடி வருவதாகவும் எங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அப்போது கூறி இருந்தனர். அதனைத் தொடர்ந்து எடியூரப்பாவின் வீட்டின் மீது பறந்த பாஜக கொடியை அகற்றி எரிந்த போராட்டக்காரர்கள் பஞ்சாரா சமூகத்தின் கொடியை ஏற்றினர்.
மேலும் எடியூரப்பாவின் வீட்டை முற்றுகையிட்டு வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்த வேண்டிய சூழலும் அப்போது ஏற்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மை ஆகியோரது உருவப்படங்களை எரித்து போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மேலும் வன்முறையை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதேசமயம், இஸ்லாமியர்களுக்கான நான்கு சதவீத இட ஒதுக்கீடு ரத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. மேலும் இந்த வழக்கானது மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 25 ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, “மே 9 ஆம் தேதி வரை கர்நாடக அரசின் இட ஒதுக்கீட்டு ரத்து முடிவை அமல்படுத்தக்கூடாது. மேலும் மே 9-ம் தேதி வரை இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று (26.04.2023) உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாகன பிரச்சாரம் மேற்கொண்டு பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அதனைத் தொடர்ந்து அவர் பொதுக் கூட்டத்தில் பேசுகையில், "மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு கண்டனத்துக்குரியதாகும் மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் உள்ளதால் உத்திர பிரதேசத்தில் இரட்டை இயந்திர அரசாகச் செயல்படுவதன் காரணமாகக் கடந்த 6 ஆண்டுகளில் எந்த கலவரமும் ஏற்படவில்லை.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பைத் திருப்திப்படுத்துவதற்காகவே மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்குக் காங்கிரஸ் கட்சி ஆதரித்து வருகிறது. இது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. அதே நேரம் பிஎப்ஐ அமைப்புக்கு நாடு முழுவதும் தடை விதித்து பாஜக எடுத்த நடவடிக்கை இஸ்லாமிய அமைப்பின் செயல்பாட்டைப் பலவீனமாக்கி உள்ளது. மேலும் இந்தியா கடந்த 1947 ஆம் ஆண்டு மத அடிப்படையில் பிரிவினைக்கு உள்ளானது. இதனால், மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அங்கீகரிக்க முடியாது. அத்துடன் மற்றொரு பிரிவினைக்கு நாங்கள் தயாராக இல்லை" என்று பேசினார். தற்போது இவரின் இந்த பேச்சானது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.