விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 14 ஆம் தேதி (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசுகையில், “ஏற்கெனவே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக பல இடங்களில் டெபாசிடை இழந்தது. தேர்தல் ஆணையம் இருக்கும்போது இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக பயப்படுவது ஏன்? இடைத்தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் போய்விடும் என்பதால்தான் அதிமுக போட்டியிடவில்லை. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுகதான். 1992-இல் பரங்கிமலை கண்டோன்மெண்ட் தேர்தலில் முதன் முறையாக வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் முறையை அறிமுகப்படுத்தியதும் அதிமுக தான்'' எனக் குற்றச்சாட்டுகளை அடுக்கி இருந்தார்.
இந்நிலையில் பாஜகவிற்கு உதவுவதற்காகவே அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்திருப்பதாக திராவிடர் கழகம் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அதிமுக இடைத்தேர்தலில் புறக்கணித்திருப்பது என்பது மறைமுகமாக பாஜகவை ஆதரிப்பதே ஆகும். இது அதிமுக கட்சியின் பலகீனத்துக்கான அறிகுறியே. அரசியல் கட்சியின் கடமையை நிறைவேற்றுவதில் இருந்து அதிமுக பின்வாங்குவது உள்நோக்கம் கொண்ட செயலாக இருக்கிறது. தேர்தல் புறக்கணிப்பால் அதிமுகவின் பொதுமதிப்பு காணாமல் போய்விடும். இது அக்கட்சிக்கான தோல்வி அச்சத்தை காட்டுகிறது. தொண்டர்கள் மட்டுமல்ல பொதுமக்கள், வாக்காளர்கள் மத்தியில் அதிமுகவுக்கு இருப்பதாக கூறப்படும் பொதுமதிப்பு இழக்கும் நிலை உருவாகும்.
தேர்தலில் நிற்பதில்லை என்ற முடிவுக்கு அதிமுக சொல்லும் காரணங்கள் பொது அறிவு பொருத்தமானதாக இல்லை. ஆம்புலன்ஸை பணம் கடத்த பயன்படுத்தியவர்கள் அதிமுகவினர் என்பதை நாடறியும். மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியை முறித்து இருந்தாலும் பிரச்சாரத்தில் மோடியை அதிமுக தலைவர்கள் விமர்சிக்கவில்லை. மராட்டியத்தில் சிவசேனாவுக்கு ஏற்பட்ட கதிதான் அதிமுகவிற்கும் ஏற்படும் என்பதை இன்றே எழுதி வைத்துவிடலாம். பாஜக கூட்டணியில் சேர்ந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பாமக கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது. பாமக மீது தமிழ்நாட்டு மக்களின் நம்பகத்தன்மை எப்படி இருக்கும்? பாமகவின் எந்தப் பிரச்சாரமும் இனி எடுபடாது. விக்கிரவாண்டி தேர்தலில் திமுக ஆட்சியின் மக்கள் வளர்ச்சி திட்டங்கள் அமோக வெற்றியைப் பெற்று தரும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.