கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால் கோவை விமான நிலையத்திற்கு வரும் கார்களை போலீசார் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''இனி கோவைக்கு வரும்பொழுது கோவையில் இப்படி பரபரப்பான சூழ்நிலைகள் இல்லாமல் ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலை வர வேண்டும். இப்பொழுது நடந்த சம்பவத்தில் கூட பல சந்தேகங்கள் எழுந்திருக்கிறது. அலசி ஆராய்ந்து இதைப்போல நிகழ்வுகள் இனி இல்லை என்பதை தமிழக காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இல்லையென்றால் நமக்கெல்லாம் தெரியாமல் இப்படி ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது அல்லவா. ஏன் இப்படி நடந்தது, வெடிக்கும் வரை நமக்குத் தெரியாமல் எப்படி இது நிகழ்ந்தது என்பதையெல்லாம் கொஞ்சம் அலசி ஆராய வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை.
என்.ஐ.ஏ வை மட்டும் சொல்லிட முடியாது, தமிழ்நாடு காவல்துறையும் இதை கவனித்திருக்க வேண்டும். ஏதோ கேஸ் சிலிண்டர் வெடித்து விட்டது என்று மேலோட்டமாகச் சொன்னார்கள். ஆனால் ஆழமாக செல்லும்போதுதான் இது கேஸ் அல்ல கேஸே வேற என்ற சூழ்நிலை வந்தது. முற்றிலுமாக பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் நாம் கவனத்தை செலுத்த வேண்டும். ஒரு குண்டு வெடித்தது என்று பாஜக சொல்லித்தான் மக்கள் அச்சம் அடைய வேண்டுமா? ஒரு இடத்தில் ஒரு கார் போகுது அங்கு குண்டு வெடிக்கிறது என்றால் மக்கள் அந்த செய்தியைப் பார்த்து அச்சம் கொள்ள மாட்டார்களா? 'அதோ குண்டு வெடித்தது பாருங்க' என்று வேறொருவர் சொன்னால்தான் அச்சம் கொள்வார்களா. மக்கள் எல்லோரும் தொலைக்காட்சியைப் பார்த்து எல்லாவற்றையும் விவரமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒருத்தர் ஒரு கருத்தை சொல்வதால் தான் மக்கள் அச்சம் அடைகிறார்கள் என்பதல்ல. சொல்லப்போனால் இப்படி சொல்வதால் மக்கள் எச்சரிக்கையாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. என்ன குறை என்பதை பார்க்காமல் மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டிருப்பது நல்லதல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து'' என்றார்.