2019ஆம் ஆண்டில் பா.ஜ.க.வைத் தோற்கடிப்போம் என மஹந்த் பரம்ஹன்ஸ் தாஸ் எனும் சாமியார் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என பா.ஜ.க. தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. அதேபோல், 2017ஆம் ஆண்டு உபி சட்டமன்றத் தேர்தலிலும் அதே வாக்குறுதியையே பா.ஜ.க. அளித்திருந்தது. அதேசமயம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான விவாதங்களும், விமர்சனங்களும் எழுந்தவண்ணமே உள்ளன.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டு பா.ஜ.க. வளர்ச்சியை மட்டுமே முன்னிறுத்தி நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் என சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். மேலும், இந்துத்வா மற்றும் ராமர் கோவில் போன்றவற்றைத் தவிர்த்து வளர்ச்சி, மேம்பாடு குறித்தே வருங்காலங்களில் திட்டங்கள் தீட்டப்படும் எனவும் பேசினார்.
இதையடுத்து, அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சவானி கோவில் சாமியார் மஹந்த் பரம்ஹன்ஸ் தாஸ், முக்தர் அப்பாஸ் நக்வியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல், 2019ஆம் ஆண்டு பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்றால், அவர்கள் உடனடியாக அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டிமுடிக்க வேண்டும். இல்லையென்றால், பா.ஜ.க.வுக்கு எதிராக ஒரு இயக்கத்தை உருவாக்கி, அடுத்த தேர்தலில் நிச்சயமாக தோற்கடிப்போம். பா.ஜ.க.வை தோற்கடிப்பது எப்படி என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும் எனவும் பேசியுள்ளார்.