வரும் பாராளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் இருந்தாக வேண்டும் என எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
சென்னையில், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 2019 பாராளுமன்ற தேர்தலில் இருந்து துவங்கியது. அதோடு மட்டுமல்ல, ஜனாதிபதி தேர்தல் போன்ற பல முக்கிய நிகழ்வுகளில் ஒருங்கிணைந்து செயல்படக் கூடிய பலமான கூட்டணியாகத்தான் இருக்கிறது. இப்போதும் இருக்கிறது. வரப்போகும் கூட்டணியிலும் இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி, தேர்தல் கூட்டணி போன்றவை தேசிய தலைமையால் எடுக்கக்கூடிய முடிவு. இன்று அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேசிய ஜனநாயக கூட்டணி என்பது அதிமுக தலைமையில் இந்த கூட்டணி சிறப்பாக செயல்படுகிறது. கடந்த சில நாட்களாக சில விரும்பத் தகாத நிகழ்வுகள் நடக்கிறது. நிச்சயமாக தேசிய தலைமை தீர்வினைக் கொடுக்கும் என நாங்கள் நம்புகிறோம்.
எங்களுக்குத் தேவை வரும் பாராளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் இருந்தாக வேண்டும். இதன் மூலம் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அடுத்து பிரதமராக பதவியேற்க இருக்கும் மோடியின் மந்திரி சபையில் அதிகமான தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் இருக்க வேண்டும். அதற்கு கூட்டணியின் பலம் முக்கியமானது. எங்கள் கட்சியில் இருந்து சென்றவர்கள் அங்கு போய் சேர்ந்ததோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. மாநிலத் தலைவரைப் பற்றி விமர்சனம் செய்தது பலருக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது.
இதெல்லாம் கூட்டணி கட்சிகளுக்கு இடையே ஏற்படுவது தான். அதிமுகவில் அனுபவம் வாய்ந்த அமைச்சர்கள் தலைவர்கள் இருக்கிறார்கள். பாஜகவில் இளமை துடிப்போடு வேகத்தோடு செயல்படுபவர்கள் இருக்கிறார்கள். அதில் சில இளைஞரணி சகோதரர்கள் உணர்ச்சிவசத்தில் சில முடிவுகளை எடுத்துள்ளார்கள். கூட்டணி என்பது முழுக்க முழுக்க தேசிய தலைமை எடுக்கக்கூடிய முடிவு. தேசிய தலைமையில் இதுகுறித்து சரியான அறிகுறி வரும்.” எனக் கூறியுள்ளார்.