நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
இந்நிலையில், தனியார் ஆங்கில இதழில் வெளியான கட்டுரை ஒன்றில், “கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி பிரதமர் ஆனது முதல் ஊழல் வழக்குகளுக்கு ஆளான எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேர் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளனர். அவ்வாறு பா.ஜ.க.வில் சேர்ந்த 25 பேரில் 3 பேருக்கு எதிரான ஊழல் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. 20 பேருக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஏதுமின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் தனியார் ஆங்கில இதழில் வெளியான கட்டுரையை மேற்கோள் காட்டி பேசுகையில், “அஜித் பவார், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலத்தின் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அசோக் சவுகான் என 25 எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகள் வழக்குகள் தொடர்ந்தன.
அதன் பின்னர் இவர்கள் தங்களது கட்சிகளை விட்டு பா.ஜ.க.வின் இணைந்து விட்டனர். இவர்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அனைத்து குற்ற்ச்சாட்டுகளும் ஆவியாகிப் போய்விட்டன. ஏனென்றால் பாஜகவின் வாஷிங் மெஷினில் சேர்ந்து வெள்ளையோடு வெள்ளையாகி விட்டன” எனத் தெரிவித்தார். முன்னதாக நேற்று (02.04.2024) பரப்புரை மேற்கொண்ட போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஜாமீன் இல்லாமல் ஓராண்டாக சிறையில் உள்ளார். அதேபோல் டெல்லி அரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சிறையில் உள்ளனர். இந்த அரசு தொடர்ந்தால் ஜனநாயகம் முற்றிலும் அழிந்துவிடும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.