சிரங்கு வந்தவன் கை சும்மா இருக்காது என்பார்கள். சில அரசியல்வாதிகளின் வாய்கூட அத்தகையதுதான். பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூடக் கருத்துகளை சமூக ஊடகங்களிலும் அரசியல் மேடைகளிலும் பா.ஜ.க.வினர் அடித்துவிடுவதைத் தாங்கமுடியாமல்தான், பிரதமர் மோடி தன்னிச்சையாகப் பா.ஜ.க.வினர் பேசுவதற்கு தடைவிதித்தார். ஆனால், அதை யார் மதிக்கிறார்கள்?
திரிபுரா முதல்வர் சமீப காலமாக மேடைகளில் உற்சாகத்தில் அள்ளிவிடும் கருத்துகளைக் கண்டு சிரிக்காதவர்கள் அபூர்வம். மகாபாரத காலத்திலே இன்டர்நெட்டுக்கு இணையான தொழில்நுட்பம் இருந்தது, மெக்கானிக் இன்ஜினியர்களால் முடியாது, ஆனால் சிவில் இன்ஜினியர்கள் சிவில் சேவைப் பணிகளுக்கு வரலாமெனக் கூறி அசத்தியவர்தான் இந்த பிப்லப் தேவ். தன் கட்சியை விமர்சிப்பவர்களின் நகங்களை வெட்டுவேன் என்றுகூட மிரட்டல் விட்டார்.
சமீபத்தில் உதய்பூரில் நடந்த ரபீந்தரநாத் தாகூர் ஜெயந்திவிழாவில் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை திருப்பியளித்தார் தாகூர் என்பதே அவரது பேச்சின் சாரம்.
1913-ல் தாகூரது கீதாஞ்சலி கவிதைத் தொகுதிக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1919-ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு தாகூர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். அப்போது தனக்கு ஆங்கிலேயரால் வழங்கப்பட்டிருந்த சர் பட்டத்தைத் திரும்பக் கொடுத்தார். எனவே, தாகூர் தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை திருப்பியளித்த நிகழ்வு என எதுவும் நடைபெறவில்லை என்பதே உண்மை.
வரலாற்றை வளைப்பதில் இவர்கள் முனைவர் பட்டம் வாங்குமளவுக்கு கில்லாடிகள் என்பதே உண்மை.