தமிழ்நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 21 மாநகராட்சி உட்பட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான நகராட்சி, பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. சில இடங்களில் நகராட்சிகளையும், பேரூராட்சிகளையும் அதிமுக கைப்பற்றியது. இந்நிலையில், தேர்தலில் வென்றவர்கள் கடந்த 2ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டனர். அதேபோல், நேற்று (4ஆம் தேதி) மேயர், துணை மேயர், நகர் மன்றத் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.
இதில், தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் 20 வார்டுகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வென்றன. இந்நிலையில், நகர்மன்றத் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளராக திமுக தலைமை அய்யம்மாள் என்பவரை அறிவித்தது. ஆனால், அவருக்கு எதிராக திமுகவைச் சேர்ந்த செண்பகம் என்பவர் நகர்மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதனால், அங்கு மறைமுக தேர்தல் நடந்தது.
இதில், மொத்தமுள்ள 27 ஓட்டுகளில் அய்யாம்மாள் 16 ஓட்டுகள் பெற்று நகராட்சித் தலைவராக தேர்வானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட செண்பகம் 11 ஓட்டுகளை பெற்று தோல்வியைத் தழுவினார்.
இந்நிலையில், அதிமுகவினர் அய்யாம்மாளுக்கு ஆதரவாக வாக்களித்ததாக தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து, சின்னமனூர் நகரச் செயலாளர் பி.ராஜேந்திரன் உள்பட 6 அதிமுக நகரமன்ற உறுப்பினர்களை அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக கட்சி தலைமை அறிக்கை வெளியிட்டது.
அதேசமயம், கடலூர் மாவட்டம் 33 வார்டுகள் கொண்ட பண்ருட்டி நகராட்சியில், 24 வார்டுகளை வென்ற திமுக கூட்டணி, அதன் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சிவா என்பவரை அறிவித்தது. அவரை எதிர்த்து மற்றொரு திமுக கவுன்சிலர் ராஜேந்திரன் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அதனால், அங்கேயும் மறைமுக தேர்தல் நடந்து. இந்தத் தேர்தலிலும், அதிமுக கவுன்சிலர்கள் கலந்துகொண்டு வாக்களித்துள்ளனர். இதில், ராஜேந்திரன் 33ல் 17 வாக்குகள் பெற்று நகர்மன்றத் தலைவரானார். இங்கும் அதிமுகவினர் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக பேச்சுகள் எழுந்துள்ளது.
இந்நிலையில், தேனியில் ஆதரவாக வாக்களித்த அதிமுகவை நீக்கிய அதிமுக ஏன் பண்ருட்டியில் நீக்கவில்லை என அதிமுகவினரே கேள்வி எழுப்பிவருகின்றனர்.